அதிக ரன்களை குவித்து உலக சாதனை புரிந்த மாணவன்மும்பையில் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் உருவாகியிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், சச்சின் டெண்டுல்கரின் திறமை மீண்டும் இந்தியாவுக்குக் கிடைக்குமா என்ற நிலையில் அர்மான் ஜாபர் என்ற 14 வயதுப் பாடசாலைச் சிறுவன் பாடசாலைகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியொன்றில் ஒரு இனிங்ஸில் 498 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
அர்மான் ஜாஃபர் இந்திய அணிக்கு விளையாடிய வாசிம் ஜாஃபரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. பந்த்ரா பாடசாலை ரிஸ்வி ஸ்பிரிங் பீல்டுக்காக விளையாடிய அர்மான் ஜாஃபர் தாதரில் உள்ள ராஜா சிவாஜி அணிக்கெதிராக இந்தத் தனிநபர் சாதனையை நிகழ்த்தினார்.
498 ஓட்டங்களை 490 பந்துகளில் அடித்து முடித்த அர்மான் ஜாஃபர் அதில் 77 பவுண்டரிகளை விளாசியுள்ளார்.
500 என்ற கனவு இலக்கை எட்டும் முன் அவர் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்துவிட்டார்.
கடந்த ஆண்டு 16 வயதினருக்குட்பட்ட பாடசாலைக் கிரிக்கெட்டில் சர்பராஸ் கான் என்ற சிறுவன் அடித்த 439 ஓட்டங்கள்தான் இதுவரை சாதனையாக இருந்து வந்தது.
பாடசாலைக் கிரிக்கெட்டில் வினோத் காம்பிளியுடன் இணைந்து 664 ஓட்டங்கள் குவித்த சச்சின் டெண்டுல்கர்தான் தனது ரோல்மொடல் என்று அர்மான் ஜாஃபர் பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற