இந்தியா என்ற பெயரை இழக்கும் அபாயத்தில் பிசிசிஐ

BCCI Logo


இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு புது நெருக்கடி மத்திய அரசின் விளையாட்டுத்துறை மூலம் வந்துள்ளது. இந்த நெருக்கடி முற்றினால், இந்திய கிரிக்கெட் அணி, இந்தியாவின் சார்பில் வருங்காலத்தில் விளையாட முடியாத நிலை ஏற்படும்.

மத்திய விளையாட்டுத் துறை, அனைத்து தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், அனைத்து தேசிய விளையாட்டு அமைப்புகளும் 'பப்ளிக்' அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் உள்பட அனைத்து விளையாட்டு அமைப்புகளும், தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கென மத்திய விளையாட்டுத்துறை நிர்ணயித்துள்ள விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்ய.

இந்த கடிதத்திற்கு டிசம்பர் 15ம் தேதிக்குள் (நாளைக்குள்) பதில் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலக்கெடுவுக்குள் பதிலளிக்காவிட்டால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பெயரில் உள்ள இந்தியா என்ற பெயரை இனிமேல் கிரிக்கெட் வாரியம் பயன்படுத்த முடியாது. மேலும், இந்தியா என்ற பெயரில் கிரிக்கெட் வாரியம் எந்த அணியையும் எந்த நாட்டுக்கும் அனுப்பி வைக்கவும் முடியாது, கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்.

கடந்த ஆண்டே இதுகுறித்து கிரிக்கெட் வாரியத்திற்கு விளையாட்டுத் துறை கடிதம் அனுப்பியது. ஆனால் அதை கிரிக்கெட் வாரியம் கண்டு கொள்ளவில்லை, தூக்கிப் போட்டு விட்டது.

ஆனால் இந்த முறை இதில் தீவிரமாக இருக்கப் போவதாக விளையாட்டுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டுத்துறை இணைச் செயலாளர் இன்ஜெட்டி ஸ்ரீனிவாஸ் கூறுகையில், கிரிக்கெட் வாரியம், அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகள், நிர்வாகிகளுக்கான வயது வரம்பு உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்க மறுத்தால், அரசு, தேசிய சின்னங்களுக்கான சட்டத்தைப் பிரயோகிக்க நேரிடும். அந்த சட்டப்படி தனியார் அமைப்பு ஒன்று இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

பல்வேறு வழிகளில் அரசிடமிருந்து பல ஆதாயங்களைப் பெறுகிறது கிரிக்கெட் வாரியம். ஆனால் அரசுடன் ஒத்துப் போக மட்டும் மறுக்கிறது. அரசு விதிமுறைகளை கடைப்பிடிக்க மறுக்கிறது. உண்மையில், தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கு அரசு வழங்கும் அனைத்து வரி விலக்குகள் உள்ளிட்டவற்றைத்தான் கிரிக்கெட் வாரியமும் அனுபவித்து வருகிறது. இந்தியாவின் பெயரில்தான் அந்த அமைப்பு அனுப்பும் அணிகள் வெளிநாடுகளுக்குப் போய் போட்டிகளில் பங்கேற்கின்றன. ஆனால் மற்ற அமைப்புகள் அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் மட்டும் முரண்டு பிடிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

அரசின் சலுகைகள் உள்ளிட்டவை இனியும் தொடர வேண்டுமானால் அரசின் அங்கீகாரத்தை கிரிக்கெட் வாரியம் பெற்றாக வேண்டும். இல்லாவிட்டால் அனைத்தையும் இழக்க வேண்டியதுதான் என்றார் ஸ்ரீனிவாஸ்.

அரசுடன் ஒத்துப் போக கிரிக்கெட் வாரியம் மறுத்தால், இந்தியா என்ற பெயரை அது பயன்படுத்த முடியாது. இந்திய அணி என்ற பெயரில் எதையும் அனுப்ப முடியாது. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் என்ற பெயரை டோணி பெற முடியாது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்று இனியும் கிரிக்கெட் வீரர்கள் கூறிக் கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

ஆனால் மத்திய அரசு இந்த முறை தீவிரமாக இருக்கும் நிலையிலும் கூட கிரிக்கெட் வாரியம், தன் போக்கில்தான் நடை போட நினைக்கிறது. டிசம்பர் 11ம் தேதி மும்பையில் நடந்த அதன் சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில், மத்திய அரசின் கடிதம் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் சட்ட ஆலோசனைகளைப் பெறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது இதையே காட்டுகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியம் உருவாகி 80 ஆண்டுகளாகிறது. ஆனால் இதுவரை மத்திய அரசை அது ஒருபோதும் உதவிக்காக அணுகியதே இல்லை. காரணம், அதனிடம் குவிந்து கிடக்கும் அபரிதமான பணம். கிரிக்கெட் வாரியத்தின் 2009-10ம் ஆண்டின் வருவாய் மட்டும் ரூ. 847 கோடியாகும். இதனால்தான் திமிரோடு நடந்து வருகிறது இந்திய கிரிக்கெட்வாரியம் என்பதுகுறிப்பிடத்தக்கது.







No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற