ஆஸ்தமா ஓரு அலசல்


ஆஸ்துமா என்பது சுவாசக் குழல்களை பாதிக்கும் ஒரு நோய். சுவாசக்குழல்கள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும். ஆஸ்துமா உள்ள நபர்களின் சுவாசக் குழாய்களின் உட்சுவர் வீக்கம் கண்டிருக்கும்.
இப்படிபட்ட வீக்கம் கண்ட சுவாசக் குழாயில் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமைமைய ஏற்படுத்தக் கூடிய பொருட்களோ அல்லது மூச்சுக் குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தக் கூடிய பொருட்களோ உதாரணமாக புகை, தூசி போன்றவை செல்லும் போது சுவாசக் குழாய்கள் இப்படிபட்ட பொருட்களுக்கு எதிராக செயல்படும் என்கிறார் சென்னை அரும்பாக்கம் ரத்னா சித்த மருத்துவமனை இயக்குனர் டாக்டர் திருத்தணிகாசலம்.அவர் மேலும் கூறியதாவது:-


இப்படி சுவாசக் குழாய்கள் எதிரிடையாக செயல்படும் போது சுவாசக் குழாய்களின் உள் சுற்றளவு குறைந்து, சாதாரண அளவை விட மிக குறைந்தளவு காற்றே நுரையீரலின் காற்றுப் பரிமாணம் நடக்கும் இடத்திற்கு செல்கிறது. சுவாசக் குழாய்கள் சுருங்குவதால், அதன் வழியாக காற்றுச் சென்று வரும் போது அதிகமாக சத்தம் கேட்கிறது. மேலும், நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது. இதன் விளைவாக, மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை, இருமல், மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக் கோளாறு போன்றவற்றை உண்டாக்குகிறது. இவை அனைத்தும் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிகமாகக் காணப்படும்.

ஆஸ்துமா நோய் கண்டவர்கள் பலர் இந்த நோயினை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். எனினும், ஒரு சில நேரங்களில் நோயின் தாக்கம் இருக்கும். அப்போது உரிய மருத்துவம் செய்து கொண்டு மற்றவர்களை போல சுறு சுறுப்பான வாழ்க்கை வாழ்கின்றனர். ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும் போது சுவாசக் குழாய்களில் மிக அதிகமான அடைப்பு ஏற்பட்டு, உடலில் முக்கிய உறுப்புகளுக்கு போதிய பிராணவாயு கிடைப்பதில்லை. (உதாரணம். மூளை, ஈரல், சிறுநீரகங்கள்) இது போன்ற சந்தப்பத்தில், அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலை ஏற்படுகிறது. ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருப்பின் உயிர் இழப்பும் நேரிடுகிறது. எனவே ஒருவர் ஆஸ்துமா வியாதியினால் பாதிக்கப்பட்டால், அந்த நபர் மருத்துவரை சந்தித்து முறைப்படி மருத்துவ உதவியை பெற்றுக் கொள்ள வேண்டும்.

நுரையீரலின் பணி:

ஆக்சிஜன், கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன் உள்பட பல்வேறு வாயுக்கள் அடங்கிய வெளிக்காற்று சுவாசக் குழாய் வழியே நுரையீரலுக்குள் நுழைகிறது. இவ்வாறு வெளிக்காற்று வந்தவுடன் அதில் பெரும் பகுதியாக உள்ள ஆக்சிஜனை மட்டும் பிரித்தெடுத்து ரத்த அணுக்களுடன் சேர்த்து நல்ல ரத்தமாக மாற்றி இதயத்துக்கு அனுப்பும் முக்கியப் பணியை நுரையீரல் செய்கிறது. இதயத்திலிருந்து தொடங்கி உடல் முழுவதும் பயணம் செய்து விட்டு வரும் கெட்ட ரத்தத்தை மீண்டும் சுத்திகரித்து ஆக்ஸிஜன் கலந்து நல்ல ரத்தமாக மாற்றி அனுப்புவதையும் நுரையீரல் செய்கிறது.

உணவு முறை:

எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவையே ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிட வேண்டும். அதாவது இட்லி, இடியாப்பம், புட்டு, ஆப்பம் போன்ற ஆவியில் வேகும் உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது. பரோட்டா, சப்பாத்தி, பிரியாணி போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மூச்சுக் குழலை நேரடியாக விரிவடையச் செய்யும் சளியை இளக்கி எளிதாக வெளியேற்றவும் மிளகு, அல்லது மஞ்சள் உதவும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. குளிர்ச்சியான பொருள்கள் காரணமாக நுரையீரலின் சுவாசப் பாதை சுருங்கி மூக்கடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஐஸ்கிரீம் உள்பட நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரிக்காய், பூசணி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். எலுமிச்சை, ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு ஆகியவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இது போன்று எளிதில் ஜீரணமாகாத உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். பால், வெண்ணெய், நெய் உள்பட கொழுப்புச் சத்து மிகுந்த உணவுப் பொருள்களைத் தவிர்ப்பது அவசியம்.

சிகிச்சை முறை:

ஆஸ்துமா நோய் இருப்பது தெரிய வந்தவுடன் மேற்சொன்ன உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது அவசியம். நோயைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து முழுமையாகச் சிகிச்சை அளிக்க சித்த மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன. முக முசுக்கை, கசலாங்கண்ணி இலைகளை (இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டினால் ஆஸ்துமாவுக்கான மூலிகை டீ தயார். இதை தினமும் காலையிலும், இரவிலும் சாப்பிடுவது சிகிச்சையின் ஒரு பகுதி மூச்சுக் குழலை விரிவடையச் செய்து மூக்கடைப்பைத் தவிர்க்கவும் சளியை எளிதாக வெளியேற்றவும் இந்த மூலிகை டீ உதவும். மிளகு கல்பம் (தூள்) இது மிளகுடன் கரிசலாங் கண்ணிச் சாறு, தூதுவளைச் சாறு, ஆடாதொடைச்சாறு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. காலை, இரவு ஆகிய இரு வேளையும் உணவு சாப்பிடுவதற்கு முன்பு இந்த மிளகு கல்பத்தை தேனுடன் கலந்து அரை டீஸ்பூன் சாப்பிட வேண்டும்.

நோய் தீவிரமாக உள்ள நிலையில் நோய் எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்த சித்த மருந்துகளைத் தொடர்ச்சியாக ஓர் ஆண்டுக்குச் சாப்பிட வேண்டும்.

மன அழுத்தம்:

மன அழுத்தம் காரணமாக ஆஸ்துமா அதிகமாகக் கூடும் இதனால் தான் ஆஸ்துமா நோய்க்கான மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாக நோயாளியின் மன நிலைக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு ஆலோசனை அளிக்கப்படுகிறது. ஆஸ்துமாவால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. தீவிர ஆஸ்துமா நோய் காரணமாக நுரையீலுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படும். நோயாளியின் உதடு, நாக்கு, நகங்கள் நீலநிறமாக மாறும், மூளை பாதிப்படையக் கூடும். இத்தகைய நிலைக்கு ஸ்டேட்டஸ் ஆஸ்துமா மாட்டிக்ஸ் என்று பெயர். சில நேரங்களில் மூச்சு அடைப்புடன், வியர்வை, படபடப்பு ஆகியவையும் சேர்ந்து இருந்தால் அது ஆஸ்துமாவாக இல்லாமல் மாரடைப்பாகக் கூட இருக்கலாம். இந் நிலையில் நோயாளியை உடனடியாக மருத்துவமனை அவசரச் சிகிச்சை பிரிவில் சேர்ப்பது அவசியம்.

காரணங்கள்:

நாம் சுவாசிக்கும் காற்று உள்பட சுற்றுச் சூழலில் மாசு காணப்படுகிறது. சில பொருட்கள், ஆஸ்துமா வியாதிக்கான அறிகுறிகள் மற்றும் பாதிப்புகளை கொண்டு வருகிறது. ஆஸ்துமா வருவதற்கான சில பொதுவான காரணங்களில் உடற்பயிற்சி, அலர்ஜி எனப்படும் ஒவ்வா பொருட்கள், எரிச்சலூட்டும் பொருட்கள் மற்றும் வைரஸ் நோய் தொற்று போன்றவையும் அடங்கும். சிலருக்கு உடற்பயிற்சி செய்யும் போதும் அல்லது வைரஸ் கிருமிகளால் தாக்கப்படும் போதும் மட்டும் ஆஸ்துமா வியாதி காணப்படுகிறது.

அறிகுறிகள்:

மூக்கடைப்பு, தும்மல் ஆகியவற்றுடன் இருமல் ஆரம்பிக்கும். இருமல் தொடங்கியவுடன் நெஞ்சில் உள்ள சளியைக் துப்புவதற்காக நோயாளி எழுந்திருப்பார். ஆனால் சளி எளிதில் வராது. கொஞ்சம் கஷ்டப்பட்டு சளியைத் துப்பும் போது சளியின் தன்மை ஜவ்வரிசி கஞ்சி போன்று இருக்கும். ஒரு சிலருக்கு சேமியா போன்று சிறிதளவு சளி வெளியேறும். கொஞ்சம் தூரம் நடந்தால் கூட இரைப்பு ஏற்படும். இளங்காலைப் பொழுது, இரவில் அதிகம் இரைப்பு இருக்கும். இவை ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறிகள். பொதுவாக எந்த அன்னியப் பொருளையும் உள்ளே அனுமதிக் காமல் வெளியே தள்ளி விடும் தன்மை நுரையீரலுக்கு உண்டு. இதனால் தான் தும்மல் ஏற்படுகிறது. ஆஸ்துமா நோயின் ஆரம்ப அறிகுறியாக தொடக்கத்தில் நுரையீரல் பாதை லேசாகச் சுருக்கமடைந்து, மூக்கடைப்பு, தும்மல் ஏற்படும். அதிகாலை, இரவில் மூக்கடைப்பு, தும்மல் அதிகமாக இருக்கும். மூக்கடைப்பு, தும்மலுடன் நெஞ்சை இறுக்கிப் பிடித்தது போன்ற உணர்வு இருக்கும். ஆரம்பத்தில் ஒரு வாரத்துக்கு இவ்வாறு பிரச்சினை இருக்கும். நோய் தீவிரமடையும் நிலையில் இரைப்பு ஏற்படத் தொடங்கும். நோயாளி தன் காதுகளை இரண்டு கைகளால் மூடிக் கொண்டால் இரைப்பின் ஒலியைக் கேட்க முடியும். அது யாழ் ஒலி போல இருக்கும் என்கிறார் டாக்டர்.
No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற